எழுசீர் ஆசிரிய விருத்தம்

3156. நூக்கல் ஆகலாத காதல் நூறு
     நூறு கோடி ஆய்ப்
பூக்க, வாச வாடை வீசு சீத நீர்
     பொதிந்த மென்
சேக்கை வீ கரிந்து, திக்கயங்கள்
     எட்டும் வென்ற தோள்,
ஆக்கை, தேய, உள்ளம் நைய,
     ஆவி வேவது ஆயினான்.

    நூக்கல் ஆகலாத - ஒதுக்கி விலக்க முடியாத; காதல் - காம
விருப்பம்; நூறு நூறு கோடியாய்ப் பூக்க - அளவிட முடியாதபடி
பன்மடங்கு பெருகி மலர; வாச வாடை வீசு - நறுமணக் காற்றுப் பட்டு;
சீத நீர் பொதிந்த - குளிர்ந்த நீர்த் துளிகள் பொருந்திய; மென் சேக்கை
வீ -
மெல்லிய படுக்கையில் பரப்பிய பூக்கள்; கரிந்து - கருகிப்
போகும்படி; திக்கயங்கள் எட்டும் வென்ற தோள் ஆக்கை தேய -
எட்டுத் திசை யானைகளை வென்ற தோள்களும் உடலும் மெலிந்து
போகும்படி; உள்ளம் நைய - மனம் குழையும்படி; ஆவி வேவது
ஆயினான் -
(இராவணன்) தன் உயிரும் வெதும்பும் நிலை அடைந்தான்.

     நூறு நூறு கோடி என்றது அளவிட முடியாத என்ற பொருள் தந்தது.                                                      90