3157. தாது கொண்ட சீதம் மேவு சாந்து,
     சந்த மென் தளிர்,
போது, கொண்டு அடுத்தபோது,
     பொங்கு தீ மருந்தினால்
வேது கொண்டதென்ன, மேனி
     வெந்து வெந்து, விம்மு தீ
ஊது வன் துருத்திபோல், உயிர்த்து
     உயிர்த்து, உயங்கினான்.

    தாது கொண்ட போது - மகரந்தம் பொருந்திய மலர்களையும்; சீதம்
மேவு சாந்து -
குளிர்ச்சி உடைய சந்தனத்தையும்; சந்த மென்தளிர் -
அழகிய மெல்லிய தளிர்களையும்; கொண்டு அடுத்தபோது - எடுத்துக்
கொண்டு பணிப் பெண்கள் (இராவணனை) நெருங்கிய காலத்தில்; பொங்கு
தீ மருந்தினால் வேது கொண்ட தென்ன -
கொதிக்கும் நெருப்புச்
சேர்ந்த மருந்தினால் வேது கொடுத்தாற் போல; மேனி வெந்து வெந்து -
உடல் வெப்பத்தால் சூடுபட்டு; விம்மு தீ ஊது வன் துருத்தி போல் -
பொங்கி எழும் நெருப்பை ஊதி வளர்க்கும் (கொல்லன்) துருத்தி போன்று;
உயிர்த்து உயிர்த்து உயங்கினான் - பெருமூச்சு விட்ட வண்ணம் மயங்கிச்
சோர்ந்தான்.

     சில நோய்களுக்கு வெப்ப நெருப்பால் வேது கொடுத்தலை
உவமையாக்கினார். 'செந்தழலின் சாற்றைப் பிழிந்து செழுஞ்சீதச் சந்தனம்
என்று ஆரோ தடவினார்' என்ற நந்திக் கலம்பகச் செய்யுளை ஒப்பிடுக.
வேது - குறிப்பு வினையாலணையும் பெயர்.                        91