3158. | தாவியாது, தீது எனாது, தையலாளை மெய் உறப் பாவியாத போது இலாத பாவி- மாழை, பானல், வேல், காவி, ஆன கண்ணி மேனி காண மூளும் ஆசையால், ஆவி சால நொந்து நொந்து, - அழுங்குவானும் ஆயினான். |
தாவியாது - (தடுமாறும்) உள்ளத்தை ஒரு நிலைப்படுத்தாது; தீது எனாது - (பிறன்மனை நயத்தலைத்) தீவினை எனக் கருதாது; தையலாளை- சீதையை; மெய் உறப் பாவியாத - (சிறிது நேரமேனும்) உள்ளார எண்ணாமல்; போது இலாத பாவி - (நல்ல) நேரம் இல்லாத (காலம்) பாவி (இராவணன்); மாழை - மாவடுவும்; பானல் - நெய்தல் பூவும்; வேல் - வேலாயுதமும்; காவி - கருங்கு வளையும்; ஆன கண்ணி - நிகர்த்த கண்களையுடைய சீதையின்; மேனி காண மூளும் ஆசையால் - உடம்பைக் காணப் பொங்கும் காமத்தால்; ஆவி சால நொந்து நொந்து - உயிர் பெரிதும் துன்பம் கொள்ள; அழுங்குவானும் ஆயினான் - வருந்துகின்றவனும் ஆனான். பழி பாவங்களைக் காமத்தால் இராவணன் மறந்து போனான். 92 |