3160.'கொன்றை துன்று கோதையோடு ஓர்
     கொம்பு வந்து என் நெஞ்சிடை
நின்றது, உண்டு கண்டது' என்று,
     அழிந்து அழுங்கும் நீர்மையான்,
மன்றல் தங்கு அலங்கல் மாரன்
     வாளி போல, மல்லிகைத்
தென்றல் வந்து எதிர்ந்த
     போது, சீறுவானும் ஆயினான்.

    'கொன்றை துன்று கோதையோடு - கொன்றைக் காயை ஒத்த
கூந்தலுடனே; ஓர் கொம்பு வந்து - ஒரு பூங்கொம்பு போன்றாள் வந்து;
என் நெஞ்சிடை நின்றது - எனது மனத்திற்குள் தங்கினாள்; கண்டது
உண்டு -
(அவளை) நான் பார்த்ததுண்டு'; என்று அழிந்து அழுங்கும்
நீர்மையான் -
என்று கருதி மனம் சிதைந்து வருந்தும் தன்மையனான
இராவணன்; மன்றல் தங்கு அலங்கல் மாரன் - மணம் பொருந்திய மலர்
மாலை சூடிய மன்மதன்; வாளி போல - எய்யும் கணை போன்ற;
மல்லிகைத் தென்றல் வந்து - மல்லிகை மணம் சுமந்த தென்றல் காற்று
வந்து; எதிர்ந்த போது- மேனியில் பட்டபோது; சீறுவானும் ஆயினான் -
(அக்காற்றின் மீது) சினம் கொள்வானும் ஆனான்.

     குளிர்ந்த தென்றலும் காமநோயை மிகுவித்தது என்று கூறினார்.
கொன்றைக் காய் குழலுக்கு உவமையாவதை 'கொன்றையம் பூங்குழலாள்'
எனச் சிலப்பதிகாரமும் கூறும் (சிலம்பு : ஆய்ச்சியர் குரவை - கொளு 6)
மன்மதன் மலர்க் கணை போலவே மல்லிகை மணம் சுமந்த தென்றலும்
வருத்தியது; உவமை மிகு நயமானது.                            94