அறுசீர் ஆசிரிய விருத்தம் 3162. | மாணிக்கம், பனசம்; வாழை மரகதம்; வயிரம், தேமா; ஆணிப் பொன் வேங்கை; கோங்கம், அரவிந்தராகம்; பூகம் சேண் உய்க்கும் நீலம்; சாலம் குருவிந்தம்; தெங்கு வெள்ளி; பாணித் தண் பளிங்கு, நாகம்; பாடலம் பவளம் மன்னோ. |
(அச் சோலையில்); பனசம் மாணிக்கம் - பலா மரங்கள் மாணிக்க மயமாகவும்; வாழை மரகதம் - வாழை மரங்கள் மரகத மயமாகவும்; தேமா வயிரம் - இனிய மாமரங்கள் வைர மயமாகவும்; வேங்கை ஆணிப் பொன் - வேங்கை மரங்கள் உயர்வகைப் பொன் மயமாகவும்; கோங்கம் அரவிந்த ராகம் - கோங்கு மரங்கள் பதும ராகம் என்னும் இரத்தின மயமாகவும்; பூகம் சேண் உய்க்கும் நீலம் - கமுகு நெடுந்தொலைவு ஒளிரும் நீலமணி மயமாகவும்; சாலம் குருவிந்தம் - ஆச்சா மரங்கள் குருவிந்தம் என்னும் மணி மயமாகவும்; தெங்கு வெள்ளி - தென்னை மரங்கள் வெள்ளி மயமாகவும்; நாகம் பாணித் தண் பளிங்கு - சுர புன்னை மரங்கள் நீரோட்டம் மிக்க கண்ணாடி மயமாகவும்; பாடலம் பவளம் - பாதிரி மரங்கள் பவள மயமாகவும் (இருந்தன). (மன்னோ - அசை) இராவணனின் சோலை மரங்கள் தங்கம், மணிகள் மயமானவை என்று சுந்தரகாண்டச் செய்யுள் (4853) விளக்குகிறது. வினை முற்று வருவித்து முடிக்கப்பட்டது. 96 |