3163. | வான் உற நிவந்த செங் கேழ் மணி மரம் துவன்றி, வான மீனொடு மலர்கள் தம்மின் வேற்றுமை தெரிதல் தேற்றா, தேன் உகு, சோலைநாப் பண், செம்பொன் மண்டபத்துள், ஆங்கு ஓர் பால் நிற அமளி சேர்ந்தான்; பையுள் உற்று உயங்கி நைவான். |
வானுற நிவந்த செங் கேழ் - விண் தொடுமாறு உயர்ந்த அழகிய ஒளியுடைய; மணி மரம் - இரத்தின மயமான மரங்கள்; துவன்றி - நெருங்கி வளர்ந்து; வான மீனொடு மலர்கள் தம்மின் - விண் மீன்களுக்கும் மரங்களின் மலர்களுக்கும் இடையே; வேற்றுமை தெரிதல் தேற்றா - வேறுபாடு தெரிய முடியாதபடி (அமைந்திருக்கும்); தேன் உகு சோலை நாப்பண் - தேன் சிந்தும் சோலையின் நடுவே; செம்பொன் மண்டபத்துள் - தங்கமயமான மண்டபத்தில்; ஆங்கு ஓர் - அங்கே இடப்பட்ட ஒரு; பால் நிற அமளி சேரந்தான் - பால் போன்ற வெள்ளை நிறப் படுக்கையினை அடைந்த (இராவணன்); பையுள் உற்று - துயரம் வந்தடைய; உயங்கி நைவான் - நொந்து வருந்தினான். முதல் இரண்டடியில் உவமை அணி அமைந்துள்ளது. 97 |