3165.பருவத்தால் வாடை தந்த பசும்
     பனி, அனங்கன் வாளி
உருவிப் புக்கு ஒளித்த புண்ணில்,
     குளித்தலும், உளைந்து விம்மி,
'இருதுத்தான் யாது அடா?' என்று
     இயம்பினன்; இயம்பலோடும்,
வெருவிப் போய், சிசிரம் நீங்கி, வேனில்
     வந்து இறுத்தது அன்றே.

    பருவத்தால் - (பின் பனிப்) பருவம் காரணமாக; வாடை தந்த
பசும்பனி -
வடதிசைக் காற்றுடன் கலந்து வந்த புதிய பனியானது;
அனங்கன் வாளி - மன்மத பாணங்கள்; உருவிப் புக்கு ஒளித்த
புண்ணில் -
பாய்ந்து நுழைந்து ஓடி மறைந்ததால் விளைந்த புண்ணில்;
குளித்தலும் - சென்று தைத்தலும்; உளைந்து விம்மி - வருந்திக் கலங்கி
(இராவணன்); 'இருதுத் தான் யாது அடா என்று - இப்பொழுது
நடப்பிலுள்ள பருவ காலம் தான் ஏதடா' என்று; இயம்பினன் -
வினவினான்; இயம்பலோடும் - அவ்வாறு வினவியதும்; வெருவிப் போய்
சிசிரம் நீங்கி -
அச்சமுற்றுப் பின் பனியான அப்பருவம் நீங்கிச் செல்ல;
வேனில் வந்து இறுத்தது - (தொடர்ந்து வரும்) வேனிலாகிய வசந்த
காலம் வந்து சேர்ந்தது; (அன்றே - அசை)

     இராவணனுக்குப் பயந்து பின்பனி விலக வேனிற் பருவம் வந்து
இசைந்தது. இயல்பின் இயங்கும் பருவ காலங்களும் அஞ்சித் தடுமாறும்
வகையில் இலங்கையர் கோன் ஆட்சி அமைந்தது; உயர்வு நவிற்சிதான்
எனினும் காவிய நிகழ்ச்சிக்குப் பொருத்தமானது. ருது என்னும் வடசொல்
இருது என வந்தது. முதுவேனில், கார், கூதிர், முன்பனி என்பன பிற
பருவங்கள்.                                                99