3167.மாதிரத்து இறுதிகாறும், தன் மனத்து
     எழுந்த மையல்-
வேதனை வெப்பம் செய்ய, வேனிலும்
     வெதுப்பும் காலை,
'யாது இது இங்கு? இதனின் முன்னைச்
     சீதம் நன்று; இதனை நீக்கி,
கூதிர்ஆம் பருவம் தன்னைக் கொணருதிர்
     விரைவின்' என்றான்.

    தன் மனத்து எழுந்த மையல் - அவன் உள்ளத்தில் எழுந்த காமம்;
மாதிரத்து இறுதிகாறும் - திசைகளின் எல்லைகளையும் தொட்டு; வேதனை
வெப்பம் செய்ய -
துன்பமாகிய வெம்மையைப் பரப்ப; வேனிலும்
வெதுப்பும் காலை -
வேனிற் காலமும் கொடிய வெப்பத்தை உண்டு
பண்ண; அவன்; 'இங்கு இது யாது? - இங்கு துன்பம் தரும் இப்பருவம்
யாது?; முன்னைச் சீதம் இதனின் நன்று - முன்பு வந்த குளிர்ச்சிப்
பனிப்பருவம் இதனினும் நன்றாயிருந்தது; இதனை நீக்கி - இவ் வேனிற்
பருவத்தை விலக்கி; கூதிராம் பருவம் தன்னை - கூதிராம் பருவகாலத்தை;
விரைவின் கொணருதிர் - விரைந்து கொண்டு வாருங்கள்'; என்றான் -
என்று பணியாளரிடம் கட்டளையிட்டான்.

     வேனிற் காலம் தன் இயல்புக் கேற்பக் காம உணர்வை மிகுவிக்கக்
கூதிர்ப் பருவத்தைக் கொணர இராவணன் ஆணையிட்டான்.           101