3169. | என்னலும், இருது எல்லாம் ஏகின; யாவும் தம்தம் பன் அரும் பருவம் செய்யா, யோகிபோல் பற்று நீத்த; பின்னரும், உலகம் எல்லாம், பிணி முதல் பாசம் வீசித் துன் அருந் தவத்தின் எய்தும் துறக்கம்போல், தோன்றிற்று அன்றே. |
என்னலும் - என இராவணன் ஆணை பிறப்பித்ததும்; இருது எல்லாம் ஏகின - எல்லாப் பருவங்களும் விலகிப் போயின; யாவும் - ஆறு பருவ காலங்களும்; தம் தம் பன் அரும் பருவம் செய்யா - தத் தமக்குரிய பருவ கால நிகழ்வுகளைச் செய்யாமல்; யோகி போல் பற்று நீத்த - தனக்குள் ஒடுங்கும் தவசி போல் செயல்பாடுகளைக் கைவிட்டன; பின்னரும் உலகம் எல்லாம் - அதன் பின்பு அனைத்துலகும்; பிணி முதல் பாசம் வீசி - நோய் முதலிய வினைத் தொடர்புகளை ஒழித்து; துன்னருந் தவத்தின் எய்தும் - செயற்கரிய தவத்தால் அடையத்தக்க; துறக்கம் போல் தோன்றிற்று - முக்தி உலகம் போல் எவ்வித மாறுபாடுமின்றி விளங்கலாயிற்று. அன்றே - ஈற்றசை. உலகம் செயலற்றுப் போன நிலையை இவ்வாறு கூறினார். இன்ப, துன்பங்களுக்குக் காரணமாவன பருவங்கள். பருவங்கள்தொழிற்படாமையால் இன்ப, துன்ப நிலைகளற்ற துறக்க உலகம் போலாயிற்றுஇலங்கை என்பது கருத்து. 103 |