3170. கூலத்து ஆர் உலகம் எல்லாம்
     குளிர்ப்பொடு வெதுப்பும் நீங்க,
நீலத்து ஆர் அரக்கன் மேனி நெய்
     இன்றி, எரிந்தது அன்றே-
காலத்தால் வருவது ஒன்றோ?
     காமத்தால் கனலும் வெந் தீ
சீலத்தால் அவிப்பது அன்றி,
     செய்யத்தான் ஆவது உண்டோ?

    கூலத்து ஆர் உலகம் எல்லாம் - கடலால் சூழப்பெற்ற உலகம்
முழுவதும்; குளிர்ப்பொடு வெதுப்பும் நீங்க - குளிர்ச்சியும் வெப்பமும்
இல்லாமற் போன நிலையிலும்; நீலத்தார் அரக்கன் மேனி - நீல நிறம்
பொருந்திய இராக்கதனாகிய இராவணனின் உடல்; நெய்யின்றி எரிந்தது -
எண்ணெயின்றியே எரியலாயிற்று; காலத்தால் வருவது ஒன்றோ? -
இவ்வெம்மைக்குக் காலம் (பருவம்) காரணமென்று கூறமுடியுமோ?;
காமத்தால் கனலும் வெந்தீ - காமநோயால் எரியும் கொடு நெருப்பை;
சீலத்தால் அவிப்பது அன்றி - நல்லொழுக்கத்தால் அணைக்கலாமே
அன்றி; செய்யத் தான் ஆவது உண்டோ? - வேறு மாற்று ஏதேனும்
செய்தல் இயலுவதோ? (இயலாது). அன்றே - அசை.

     நெய்யின்றி நெருப்பு எரிந்தது என்றது காரணமின்றியே காரியம்
நிகழ்வதாகக் காட்டுவதால் விபாவனை அணி.                      104