இராவணன் சந்திரனைக் கொணருமாறு கூறுதல் 3171. | நாரம் உண்டு எழுந்த மேகம், தாமரை வளையம், நானச் சாரம் உண்டு இருந்த சீதச் சந்தனம், தளிர், மென் தாதோடு, ஆரம், உண்டு எரிந்த சிந்தை அயர்கின்றான்; அயல் நின்றாரை, 'ஈரம் உண்டு என்பர் ஓடி, இந்துவைக் கொணர்மின்' என்றான். |
நாரம் உண்டு எழுந்த மேகம் - நீரை அருந்தி எழுந்த முகில்களும்; தாமரை வளையம் - தாமரை மாலைகளும்; நானச் சாரம் உண்டு இருந்த- கஸ்தூரியின் சாரம் கலந்திருக்கின்ற; சீதச் சந்தனம் - குளிர்ந்த சந்தனமும்; தளிர் - தளிர்களும்; மென்தாதோடு - மென்மையான மகரந்தமும்; ஆரம் - குளிர்ந்த முத்துக்களும்; உண்டு - மேனியில் பூசப்பெற்றும்; எரிந்த சிந்தை அயர்கின்றான் - வெப்ப மிகுதியால் மனம் தளர்கின்ற இராவணன்; அயல் நின்றாரை - அருகில் நின்ற பணியாளரை நோக்கி; 'ஈரம் உண்டு என்பர் - நிலாவுக்குக் குளிர்ச்சி உண்டு என்கிறார்கள்; ஓடி - நீங்கள் விரைந்தோடி; இந்துவைக் கொணர்மின் - சந்திரனைக் கொண்டு வாருங்கள்'; என்றான் - எனக் கட்டளையிட்டான். பருவ காலங்கள் அகன்ற பின் குளிர்ந்த பொருள்கள் எவையும் பயன்படாமல் போகச் சந்திரனைக் கொண்டு வர இராவணன் உத்தரவிட்டான். 105 |