| 3172. | வெஞ் சினத்து அரக்கன் ஆண்ட       வியல் நகர்மீது போதும்   நெஞ்சு இலன், ஒதுங்குகின்ற       நிறை மதியோனை நேடி,   'அஞ்சலை; வருதி; நின்னை       அழைத்தனன் அரசன்' என்ன,   சஞ்சலம் துறந்துதான், அச்       சந்திரன் உதிக்கலுற்றான். |  
     வெஞ்சினத்து அரக்கன் - கொடிய சினம் படைத்த இராக்கதனான இராவணன்; ஆண்ட வியல் நகர் மீது - அரசாளுகின்ற பெரிய இலங்கை மாநகரின் மேலே; போதும் - போவதற்கு; நெஞ்சு இலன் - மன உறுதி இல்லாதவனாய்; ஒதுங்குகின்ற - (ஒரு பக்கமாய்) ஓரத்தில் செல்லுகின்ற; நிறை மதியோனை நேடி - பூரணச் சந்திரனை (ஏவலர்கள்) தேடிக் கண்டு; 'அஞ்சலை வருதி' - அச்சம் நீத்து வருவாயாக; "நின்னை அழைத்தனன்" அரசன் என்ன - உன்னை அழைத்து வரும்படி மன்னன் ஏவினான்' என்று கூற; சஞ்சலம் துறந்து - மனக் கவலை நீத்து; அச் சந்திரன் - அந்தச் சந்திரன்; தான் உதிக்கலுற்றான் - அவ்விலங்கை மாநகரின் மீது உதிக்கத் தொடங்கினான்.                                       106  |