3173. அயிர் உறக் கலந்த நல் நீர்
     ஆழிநின்று, ஆழி இந்து-
செயிர் உற்ற அரசன், ஆண்டு ஓர்
     தேய்வு வந்துற்ற போழ்தில்,
வயிரம் உற்று உடைந்து சென்றோர்
     வலியவன்-செல்லுமாபோல்
உயிர் தெற உவந்து வந்தான் ஒத்தனன்,
     -உதயம் செய்தான்.

    செயிர் உற்ற அரசன் - பகைமை பாராட்டிய ஒரு மன்னவன்;
ஆண்டு - ஒருக்கால்; ஓர் தேய்வு வந்துற்ற போழ்தில் - மெலிவு வந்து
ஆற்றல் குன்றிய நேரத்தில்; உடைந்து சென்றோர் வலியவன் - முன்னம்
அவனிடம் தோல்வி கண்ட ஒரு வல்லவன்; வயிரம் உற்றுச் செல்லுமா
போல் -
(பழம் பகைக்குப் பழி தீர்க்கப்) பகைமை பாராட்டி மேற்
சென்றாற் போல; ஆழி இந்து - சக்கர வட்டம் போன்ற சந்திரன்; அயிர்
உறக் கலந்த நல் நீர் -
நுண் மணல் சூழ்ந்த நல்ல நீரை உடைய; ஆழி
நின்று -
கடலிலிருந்து மேலெழுந்து; உயிர் தெற - இராவணன் உயிரை
வருத்த; உவந்து வந்தான் ஒத்தனன் - மகிழ்வோடு வந்தவனைப் போல்
விளங்கி; உதயம் செய்தான் - புலப்பட்டுத் தோன்றலுற்றான்.

     முன்பு இராவணனிடம் அஞ்சி ஏவல் செய்த சந்திரன், அவன் மீது
பழி தீர்க்க வந்தான் போல் உதயம் செய்தான். இப்பாடலில் தற்குறிப்பேற்ற
அணி அமைந்துள்ளது.                                         107