3174. | பராவ அருங் கதிர்கள் எங்கும் பரப்பி, மீப் படர்ந்து, வானில் தராதலத்து, எவரும் பேணா, அவனையே சலிக்கும் நீரால், அரா-அணைத் துயிலும் அண்ணல், காலம் ஓர்ந்து, அற்றம் நோக்கி, இராவணன் உயிர்மேல் உய்த்த திகிரியும், என்னல் ஆன. |
பராவ அருங் கதிர்கள் - போற்றுதற்கரிய (சிறப்புமிக்க) (அச்சந்திரனின்) கிரணங்களை; எங்கும் பரப்பி - எத்திசையிலும் பரவ விட்டுக் கொண்டு; மீப் படர்ந்து - மேற் சென்று; வானில் - விண்ணுலகில்; தராதலத்து - மண்ணுலகில்; எவரும் பேணா அவனையே - எவராலும் நேசிக்கப்படாத இராவணனையே; சலிக்கும் நீரால் - துன்புறுத்தும் தன்மையினால்; அரா அணைத் துயிலும் அண்ணல் - ஆதிசேடனாகிய பாம்புப் படுக்கையில் உறங்கும் திருமால்; காலம் ஓர்ந்து - சமயம் பார்த்து; அற்றம் நோக்கி - அவன் (இராவணன்) அழிவைக் கருதி; இராவணன் உயிர்மேல் உய்த்த - அவ்விராவணன் உயிர் மீது ஏவிய; திகிரியும் என்னல் ஆன - சக்கரப்படை என்று சொல்லும்படியாகவும் விளங்கின. கடலினின்றும் பொங்கிய நிலா, பாற்கடல் துயிலும் பரமன் ஏவிய சக்கரமாகக் கற்பித்தல் தன்மைத் தற்குறிப்பேற்ற அணி. 108 |