3175. | அருகுறு பாலின் வேலை அமுது எலாம் அளைந்து வாரிப் பருகின, பரந்து பாய்ந்த நிலாச் சுடர்ப் பனி மென் கற்றை, நெரியுறு புருவச் செங் கண் அரக்கற்கு, நெருப்பின் நாப்பண் உருகிய வெள்ளி அள்ளி வீசினால் ஒத்தது அன்றே. |
அருகு உறு பாலின் வேலை - பக்கத்தில் அமைந்துள்ள பாற் கடலினின்றும்; அமுதெலாம் அளைந்து வாரி - அமுதம் முழுவதையும் வாரி யெடுத்து; பருகின பரந்து பாய்ந்த நிலாச் சுடர் - குடித்து எங்கும் விரிந்து பரவிய சந்திரனின் ஒளியான; பனி மென் கற்றை - மெல்லிய குளிர்ந்த கிரணங்கள்; நெரியுறு புருவச் செங்கண் அரக்கற்கு - இப்போது நெரிந்த புருவங்களையும் சிவந்த கண்களையும் உடைய இராக்கதனாகிய இராவணனுக்கு; நெருப்பின் நாப்பண் - நெருப்பின் நடுவே (வைக்கப்பட்டதால்); உருகிய வெள்ளி - கொதித்த வெள்ளிக் குழம்பை; அள்ளி வீசினால் ஒத்தது - கைகளால் வாரி வீசினாற் போன்றிருந்தது. (அன்றே - அசை). பாற்கடலில் தோன்றிய சந்திரன் அக்கடலிலிருந்தும் தோன்றிய அமுதத்தைப் பருகி நிலவொளியாக வெளியிடுவதாகக் கூறுதல் தற்குறிப்பேற்ற அணி. 109 |