3176.மின் நிலம் திரிந்தது அன்ன
     விழுநிலா-மிதிலை சூழ்ந்த
செந்நெல் அம் கழனி நாடன் திரு
     மகள் செவ்வி கேளா,
நல் நலம் தொலைந்து சோரும்
     அரக்கனை, நாளும் தோலாத்
துன்னலன் ஒருவன் பெற்ற
     புகழ் எனச்சுட்டது அன்றே.

    மின் நிலம் திரிந்தது அன்ன - மின்னல் ஒன்று நிலத்தில்
உலாவியது போன்ற; விழுநிலா - சிறந்த சந்திர கிரணமானது; மிதிலை
சூழ்ந்த -
மிதிலை நகரத்தைச் சூழ்ந்த; செந்நெல் அம் கழனி நாடன் -
செந்நெல் வயல்களை உடைய விதேக நாட்டு அரசனான சனகனது; திரு
மகள் -
செல்வ மகளான சீதையின்; செவ்வி - வடிவப் பொலிவை; கேளா
-
(தங்கை வாயிலாகக்) கேட்டறிந்து; நல் நலம் தொலைந்து சோரும்
அரக்கனை -
(அதனால்) தன் இனிய நலம், சிறப்பு ஆகியனவற்றை
இழந்து தவிக்கும் இராக்கதனாம் இராவணனை; நாளும் தோலா -
எந்நாளும் தோல்வியுறாத; துன்னலன் ஒருவன் - பகைவன் ஒருவன்;
பெற்ற - அடைந்த; புகழ் எனச் சுட்டது - புகழாகிய பெருமை மனதைச்
சுடுவது போன்று துன்பம் தந்தது. அன்றே - ஈற்றசை.

     இப்பாடலில் அமைந்திருப்பது உவமையணி.                   110