3177.கருங் கழல் காலன் அஞ்சும்
     காவலன், கறுத்து நோக்கி,
'தரும் கதிர்ச் சீத யாக்கைச்
     சந்திரன்-தருதிர் என்ன,
முருங்கிய கனலின், மூரி விடத்தினை
     முருக்கும் சீற்றத்து,
அருங் கதிர் அருக்கன்தன்னை ஆர்
     அழைத்தீர்கள்?' என்றான்.

    கருங்கழல் காலன் - பெரிய வீரக் கழலை அணிந்த இயமனும்;
அஞ்சும் காவலன் - அஞ்சுகின்ற பெருமை படைத்த இராவணன் -
கறுத்து நோக்கி - (தன் பணியாளரைச்) சினந்து நோக்கி; சீதம் தரும்
கதிர் -
குளிர்ச்சியைத் தரும் கிரணங்கள் கொண்ட; யாக்கைச் சந்திரன் -
மேனி படைத்த சந்திரனை; தருதிர் என்ன - அழைத்து வாருங்கள் என்று
(யான்) கூற; முருங்கிய கனலின் - அழிக்கும் கொடு நெருப்பையும்; மூரி
விடத்தினை -
வலிமை மிக்க நஞ்சினையும்; முருக்கும் சீற்றத்து - கடும்
கோபத்தையும்; அருங்கதிர் அருக்கன் தன்னை - (கொண்ட) வெப்பக்
கிரணங்களையும் கொண்ட சூரியனை; 'ஆர் அழைத்தீர்கள்' என்றான் -
அழைத்து வந்தது யார் என்று கேட்டான்.

     குளிர் நிலவைக் கடுங்கதிராய் உணர்ந்தான்.                  111