3178. | அவ் வழி, சிலதர் அஞ்சி, 'ஆதியாய்! அருள் இல்லாரை இவ் வழித் தருதும் என்பது இயம்பல் ஆம் இயல்பிற்று அன்றால்; செவ் வழிக் கதிரோன் என்றும் தேரின்மேல் அன்றி வாரான்; வெவ் வழித்து எனினும், திங்கள், விமானத்தின் மேலது' என்றார். |
அவ்வழிச் சிலதர் அஞ்சி - இராவணன் இவ்வாறு வினவிய போது பணியாளர் அச்சம் கொண்டு; ஆதியாய் - முதல்வனே; அருள் இல்லாரை- உன்னால் அருளப்பட்டாரையன்றிப் பிறரை; இவ் வழித் தருதும் என்பது- இங்கு யாம் அழைத்து வருதல் என்பது; இயம்பலாம் இயல்பிற்று அன்று - பேசத் தக்க தன்மையது அன்று; செவ்வழிக் கதிரோன் - சிவந்த கிரணங்கள் உடைய சூரியன்; என்றும் தேரின் மேல் அன்றி வாரான் - எப்போதும் தேர் மீதன்றி வரமாட்டான்; வெவ்வழித்து எனினும் - (உனக்கு) வெப்பம் தருவதாய் இருப்பினும்; திங்கள் - சந்திரன்; விமானத்தின் மேலது என்றார் - விமானத்தின் மீதில் உள்ளான் என்றனர்; ஆல் - அசை. கதிரவனும் திங்களும் பயணம் செய்யும் முறைமை எடுத்துக் காட்டினார். 112 |