இராவணன் நிலாவைப் பழித்தல்

3179. பணம் தாழ் அல்குல் பனி மொழியார்க்கு
     அன்புபட்டார் படும் காமக்
குணம்தான் முன்னம் அறியாதான்
     கொதியாநின்றான்; மதியாலே,
தண் அம் தாமரையின் தனிப் பகைஞன்
     என்னும் தன்மை, ஒருதானே
உணர்ந்தான்; உணர்வுற்று, அவன்மேல் இட்டு,
     உயிர்தந்து உய்க்க உரைசெய்வான்;

    பணம் - பாம்பின் படம்; தாழ் - தோற்கும்படியான; அல்குல் -
அல்குலையும்; பனி மொழியார்க்கு - குளிர்ச்சி பொருந்திய பேச்சையும்
உடைய பெண்களிடம்; அன்புபட்டார் - ஆசை கொண்டார்; படும் -
அடைகின்ற; காமக் குணம் - காதல் நோயின் தன்மையை; தான் முன்னம்
அறியாதான் -
முன் எப்போதும் துய்த்தறியாத இராவணன்; மதியாலே
கொதியா நின்றான் -
சந்திரனால் துன்பம் கொண்டவனாகி; தண் அம்
தாமரையின் -
குளிர்ந்த அழகிய தாமரைக்கு; தனிப் பகைஞன் என்னும்
தன்மை -
(இந்தச் சந்திரனே) நேரான எதிரி என்னும் உண்மையை; ஒரு
தானே உணர்ந்தான் -
தனக்குத் தானே உணர்ந்து கொண்டான்;
உணர்வுற்று - இவ்வுண்மை உணர்வு வந்து எய்தியதும்; அவன் மேல்
இட்டு -
அச் சந்திரன் மேல் வைத்து; உயிர் தந்து உய்க்க - தன் உயிரை
அளித்துக் காக்குமாறு; உரை செய்வான் - கூறத் தொடங்கினான்.

     இதுகாறும் தான் விரும்பிய மகளிரை அடைதலல்லாது நினைந்து
வருந்தும் அனுபவம் இராவணனுக்கு ஏற்படவில்லை என்பதாம்.     113