3180. | 'தேயாநின்றாய்; மெய் வெளுத்தாய்; உள்ளம் கறுத்தாய்; நிலை திரிந்து காயா நின்றாய்; ஒரு நீயும், கண்டார் சொல்லக் கேட்டாயோ? பாயாநின்ற மலர் வாளி பறியாநின்றார் இன்மையால் ஓயாநின்றேன்; உயிர் காத்தற்கு உரியார் யாவர்?-உடுபதியே! |
உடுபதியே - விண்மீன்களின் தலைவனே!; தேயா நின்றாய் - (நீ, உன்) உடல் தேயப் பெற்றாய்; மெய் வெளுத்தாய் - மேனி வெண்ணிறமுற்றாய்; உள்ளம் கறுத்தாய் - உள்ளிடத்தே கறுத்தும் விளங்குகின்றாய்; நிலை திரிந்து காயா நின்றாய் - குளிர்ச்சி நிலை மாறி வெப்பமும் தருகின்றாய்; ஒரு நீயும் - உயர்ந்தவனாகிய நீயும்; கண்டார் சொல்லக் கேட்டாயோ - (என்னைப் போன்றே) சீதையின் அழகைக் கண்டவர்கள் வருணிக்கக் கேட்டனையோ? பாயா நின்ற மலர் வாளி - (என் உடல் மீது) பாய்கின்ற மன்மதனின் மலர்க் கணைகள்; பறியா நின்றார் இன்மையால் - பறித்து என்னைப் பாதுகாப்பார் இல்லாமையினால்; ஓயா நின்றேன் - தளர்வுற்று நின்றேன்; உயிர் காத்தற்கு - என் (தவிக்கும்) உயிரைக் காப்பாற்ற; உரியார் யாவர் - உரியவர் தான் யார் உள்ளார்? (எவரும் இலர்). எனது துயரைத் தணிக்க உன்னை அழைத்தால் நீயே துயர் மிக்கவனாய் உள்ளாய் என்பது கருத்து. உள்ளம் கறுத்தாய் - சிலேடை. விண்மீன்கள் சந்திரனின் மனைவியர் என்னும் புராணக் கருத்தால் உடுபதி என்றார். 114 |