3181. | 'ஆற்றார் ஆகின், தம்மைக் கொண்டு அடங்காரோ? என் ஆர் உயிர்க்குக் கூற்றாய் நின்ற குலச் சனகி குவளை மலர்ந்த தாமரைக்குத் தோற்றாய்; அதனால், அகம்கரிந்தாய்; மெலிந்தாய்; வெதும்பத் தொடங்கினாய், மாற்றார் செல்வம் கண்டு அழிந்தால், வெற்றி ஆகவற்று ஆமோ?' |
என் ஆர் உயிர்க்கு - என்னுடைய இனிய உயிருக்கு; கூற்றாய் நின்ற - எமனாய் அமைந்த; குலச் சனகி - நற்குடிச் செல்வி சீதையின்; குவளை மலர்ந்த தாமரைக்கு - கண்களாகிய குவளைப் பூக்கள் பூத்திருக்கும் முகமாகிய தாமரைக்கு; தோற்றாய் - நீ தோல்வியுற்றாய்; அதனால் அகம் கரிந்தாய் - அக்காரணத்தால் உள்ளம் கரிந்து போனாய்; மெலிந்தாய் - உடல் தேய்ந்தாய்; வெதும்பத் தொடங்கினாய் - மேனி வெப்பமுறவும் தொடங்கினாய்; மாற்றார் செல்வம் கண்டு அழிந்தால் - பிறர் வளம் கண்டு இங்ஙனம் சிதைவுற்றால்; வெற்றி ஆக வற்று ஆமோ- வென்று உயர்தல் இயலுவதாகுமோ?; ஆற்றார் ஆகின் - தம்மால் வெல்ல இயலாதென உணர்ந்தால்; தம்மைக் கொண்டு அடங்காரோ? - (அறிவு மிக்கோர்) தம் நிலை உணர்ந்து கொண்டு அடங்கி விட மாட்டார்களோ? (அடங்குதல் தானே பொருத்தம்!) முன் கவியிற் கூறியது போலன்றி இங்குத் தாமரைக்குப் பகைவனான சந்திரன் சீதையின் முகத் தாமரைக்குத் தோற்றான் என்றார். மேலும் தான் மலர்விப்பதற்குரிய குவளைகளும் பகையான தாமரைகள் மலரும் முகமாகிய குளத்தில் இருத்தலால் சந்திரன் தோற்றுப் போகிறான். என் ஆருயிர்க்குச் சானகியே கூற்று என்ற இராவணன் மொழி பின்வருவதை முன் உணர்த்தி நின்றது. உவமையாகு பெயராய்க் குவளை, கண்களை உணர்த்துகின்றது. 115 |