இராவணன் ஆணைப்படி பகலவன் வருதல்

3182. என்னப் பன்னி, இடர் உழவா, 'இரவோடு
     இவனைக் கொண்டு அகற்றி;
முன்னைப் பகலும் பகலோனும் வருக'
    என்றான்; மொழியாமுன்,
உன்னற்கு அரிய உடுபதியும் இரவும்
     ஒழிந்த; ஒரு நொடியில்
பன்னற்கு அரிய பகலவனும்
     பகலும் வந்து பரந்தவால்.

    என்னப் பன்னி - இவ்வாறு பல்வகையிலும் கூறி; இடர் உழவா -
துன்பம் அனுபவித்து; 'இரவோடு இவனைக் கொண்டு அகற்றி - இரவு
நேரத்தையும்' இச்சந்திரனையும் இவ்விடம் விட்டு நீக்கி; முன்னைப்
பகலும்' பகலோனும் வருக -
முன்பு போலவே பகற் பொழுதையும்
சூரியனையும் கொண்டு வருக; என்றான் - என இராவணன் ஆணை
பிறப்பித்தான்; மொழியாமுன் - இந்தக் கட்டளையைக் கூறி முடிக்கும்
முன்பே; உன்னற்கு அரிய - நினைத்தற்கு (துன்பத்தால்) முடியாத;
உடுபதியும் இரவும் ஒழிந்த - சந்திரனும் இரவுப் பொழுதும் அகன்று
சென்றனர்; ஒரு நொடியில் - கண நேரத்துக்குள்ளாக; பன்னற்கு அரிய -
புகழ்தற்கு அரிய பெருமை வாய்ந்த; பகலவனும் பகலும் வந்து பரந்த -
சூரியனும் பகற் பொழுதும் வந்து பரவலாயின; உடு - விண்மீன்; ஆல் -
அசை.                                                      116