3183. | இருக்கின் மொழியார் எரிமுகத்தின் ஈந்த நெய்யின், அவிர்செம்பொன் உருக்கி அனைய கதிர் பாய, அனல்போல் விரிந்தது உயர் கமலம்; அருக்கன் எய்த, அமைந்து அடங்கி வாழா, அடாத பொருள் எய்திச் செருக்கி, இடையே, திரு இழந்த சிறியோர் போன்ற, சேதாம்பல். |
இருக்கின் மொழியார் - ரிக் முதலிய வேத மந்திரங்கள் அறிந்த அந்தணர்; எரிமுகத்தின் - நெருப்பின் முகத்தில்; ஈந்த நெய்யின் - சொரிந்த நெய்யினால்; அவிர் செம்பொன் உருக்கி அனைய - (எழும் நெருப்பில்) உருகிச் சுடர் விடும் தங்கம் போல்; கதிர்பாய - சூரியக் கதிர்கள் விரிய; அனல்போல் - நெருப்புத்துண்டு கனல் விடுதல் போல்; உயர் கமலம் விரிந்தது - மலர்களுட் சிறந்த தாமரைகள் மலர்ந்தன; அருக்கன் எய்த - சூரியன் வந்ததனால்; சேதாம்பல் - செவ்வாம்பல் மலர்கள்; அடாத பொருள் எய்தி - தம் தகுதிக்குப் பொருந்தாத செல்வம் பெற்றமையினால்; செருக்கி - கர்வம் பூண்டு; அமைந்து அடங்கி வாழா - இயல்பாக அடக்கம் கொண்டு வாழாது; இடையே திரு இழந்த - வாழ்வினிடையே அச் செல்வத்தை இழந்துவிட்ட; சிறியோர் போன்ற - கீழ் மக்களைப் போல் காட்சி தந்தன. சந்திரன் சற்றே ஒளி வீசி இராவணன் ஆணையால் உடன் மறைந்ததால் குவளைப் பூக்கள் சிறிது காலம் செல்வம் பெற்று இழந்த சிறியோர் போன்றன என்றார். சேதாம்பல் - பண்புத்தொகை. 117 |