கலிவிருத்தம்

3185. மணந்த பேர் அன்பரை,
     மலரின் சேக்கையுள்,
புணர்ந்தவர், இடை ஒரு
     வெகுளி பொங்கலால்,
கணம் குழை மகளிர்கள் கங்குல்
     வீந்தது என்று
உணர்ந்திலர்; கனவினும்
     ஊடல் தீர்ந்திலர்.

    கணம் குழை மகளிர்கள் - பலவகைக் காதணிகளும் பூண்ட அரக்க
மகளிர்; மலரின் சேக்கையுள் - மலர்ப் படுக்கையில்; மணந்த பேர்
அன்பரை -
தம்மை மணந்த கணவர் தம்மை; புணர்ந்தவர் - அணைத்து
மகிழ்ந்தவர்; இடை ஒரு வெகுளி பொங்கலால் - கூடலிடையே தம்
கணவர்பால் கொண்ட ஊடலின் சினம் மீதூர்தலால்; கங்குல் வீந்தது -
இரவு முடிந்து போய் விட்டது; என்று உணர்ந்திலர் - என அறியாமற்
போயினர்; கனவினும் - உறக்கத்தில் எழும் கனவிலும்; ஊடல் தீர்ந்திலர்-
தம் ஊடல் நீங்காதவராய் விளங்கினர்.

     விரைவில் நீங்கும் இரவென உணராமல் ஊடற்கோபம் தொடர
உறங்கினர் அரக்க மகளிர்.                                      119