3186. | தள்ளுறும் உயிரினர், தலைவர் நீங்கலால், நள் இரவிடை உறும் நடுக்கம் நீங்கலர்- கொள்ளையின் அலர் கருங் குவளை நாள்மலர் கள் உகுவன என, கலுழும் கண்ணினார். |
நள் இரவிடை - நடு இராத்திரியெனக் கருதத்தக்க வேளையில்; தலைவர் நீங்கலால் - (விடிந்து போனதால்) தங்கள் கணவர் பிரிந்து சென்றமையினால்; தள்ளுறும் உயிரினர் - உடல் விட்டு நீங்கும் உயிரென்ற தன்மை உடையராய்; உறும் நடுக்கம் நீங்கலர் - மெய்யில் ஏற்பட்ட நடுங்குதல் நீங்காதவராய் (அரக்க மகளிர் சிலர்); கொள்ளையின் அலர் - மிகுதியாகச் செழித்து மலர்ந்த; கருங்குவளை நாள் மலர் - புதிய கருங்குவளை மலர்கள்; கள் உகுவன என - தேன் சிந்துவன போன்று; கலுழும் கண்ணினார் - கண்ணீர் பொழியும் கண்களை உடையார் ஆயினர். இரவு நீங்கியதால் ஏற்பட்ட விசித்திர நிகழ்ச்சிகளில் ஒன்றாக இதனைக் கூறினார். 120 |