3187. அணைமலர்ச் சேக்கையுள்
     ஆடல் தீர்ந்தனர்,
பணைகளைத் தழுவிய
     பவள வல்லிபோல்,
இணை மலர்க் கைகளின்
     இறுக, இன் உயிர்த்
துணைவரைத் தழுவினர்,
     துயில்கின்றார் சிலர்.

    சிலர் - மேலும் சில அரக்க மகளிர்; அணைமலர்ச் சேக்கையுள் -
பஞ்சு மெத்தை மேல் மலர் தூவிய படுக்கையில்; ஆடல் தீர்ந்தனர் -
கலவி முற்றியவராய்; பணைகளைத் தழுவிய - பருத்த மரங்களைப்
பின்னிய; பவளவல்லி போல் - பவளக் கொடிகளைப் போல; இன் உயிர்த்
துணைவரை -
இனிய உயிரனைய கணவர்களை; இணை மலர்க்
கைகளின் -
மலர் போன்ற இரண்டு கரங்களாலும்; இறுகத் தழுவினர் -
அழுத்தமாக அணைத்தவாறு; துயில்கின்றார் - உறங்கினர்.

     உயிர்த் துணைவர் - உவமத் தொகை (உயிர் போன்ற துணைவர்).
ஆடவரின் திண்மைக்கு மரங்களும், பெண்டிரின் எழிலுக்கும் மென்மைக்கும்
பவளக் கொடிகளும் பொருந்திய உவமைகளாயின.                   121