| 3189. | விரிந்து உறை துறைதொறும் விளக்கம் யாவையும், எரிந்து இழுது அஃகல, ஒளி இழந்தன- அருந் துறை நிரம்பிய உயிரின் அன்பரைப் பிரிந்து உறைதரும் குலப் பேதைமாரினே. |
அருந்துறை நிரம்பிய - அரிய அறிவுத் துறைகளில் வல்ல; உயிரின் அன்பரை - (தம்) உயிர் போன்ற கணவரை; பிரிந்து உறை தரும் - பிரிந்து தனித்திருக்கும்; குலப் பேதைமாரின் - குல மாதர்களைப் போன்று; விரிந்து உறை துறை தொறும் - நகரின் விரிந்த பல பகுதிகளிலும்; விளக்கம் யாவையும் - உள்ள விளக்குகள் எல்லாம்; எரிந்து இழுது அஃகல - எரிந்து நெய் வற்றவில்லையாயினும்; ஒளி இழந்தன - (சூரியன் வரவால்) தம் ஒளி குன்றின; ஏ - ஈற்றசை. பகலின் எதிர்பாராத வரவினால் நேர்ந்த இரண்டு நிகழ்ச்சிகளை ஒன்றற்கொன்று உவமையாக மொழிந்தார் அஃகுதல் - சுருங்குதல். அஃகுதல் இல : அஃகல். 123 |