3192. | நஞ்சு உறு பிரிவின, நாளின் நீளம் ஓர் தஞ்சு உற விடுவது ஓர் தயாவு தாங்கலால், வெஞ் சிறை நீங்கிய வினையினார் என, நெஞ்சு உறக் களித்தன- நேமிப்புள் எலாம். |
நாளின் நீளம் - பகல் நேரம் நீளுதலால்; ஓர் தஞ்சு உற - அதுவே தஞ்சமாக அமைய; நஞ்சுறு பிரிவின - கொடிய விடம் போலும் பிரிவுத் துன்பத்தினைப் பெற்றனவாய் விளங்கிய; நேமிப்புள் எலாம் - சக்கரவாகப் பறவைகளெல்லாம்; விடுவது ஓர் தயாவு தாங்கலால் - அத்துன்பம் நீங்கும் பகற் பொழுதின் கருணையினால்; வெஞ்சிறை நீங்கிய - பிறவியாகிய கொடிய சிறையினின்றும் விடுபட்ட; வினையினார் என - நல் வினையாளர் போல; நெஞ்சு உறக் களித்தன - மனம் நிறைந்து மகிழ்ந்தன. இரவில் பிரிவுத் துன்பமுறும் சக்கரவாகப் புட்கள் பகலில் கூடி மகிழ்ந்தன. பிரிவு நஞ்சென உவமிக்கப் பெற்றது. நீளம் - கூடு எனவும் பொருள் கொள்ளலாம். தயாவு : தயா, தயவு, கருணை. 126 |