3193. | நாள்மதிக்கு அல்லது, நடுவண் எய்திய ஆணையின் திறக்கலா அலரில் பாய்வன, மாண் வினைப் பயன்படா மாந்தர் வாயில் சேர் பாணரின் தளர்ந்தன- பாடல்-தும்பியே. |
நாள் மதிக்கு அல்லது - ஒவ்வொரு நாளும் உதிக்கும் நிலாவுக்கு அன்றி; நடுவண் எய்திய ஆணையின் - இடையில் வந்து சேரும் (பகலவனின்) கட்டளைக்கு; திறக்கலா - மலராத; அலரில் பாய்வன - குவளை போன்ற மலர்களில் பாய்வனவான; பாடல் தும்பி - இசை பாடும் வண்டுகள் (அவை குவிந்துள்ள நிலையில்); மாண்வினைப் பயன்படா - மாட்சி மிக்க கலைத் தொழிலைப் பயன் கொள்ளாத; மாந்தர் வாயில் சேர்- மனிதர்களின் வீட்டு வாசலை அடைந்து; பாணரின் தளர்ந்தன - (பயன்பெறாத) பாணர்களைப் போல் சோர்வுற்றன; ஏ - ஈற்றசை. பகற் பொழுதில் குவிந்த மலர்களில் பாய்ந்த வண்டுகள் கலைநயமுணராதார் முன் சென்ற பாணர் போன்று சோர்வுற்றன. 127 |