3195. | ஏவலின் வன்மையை எண்ணல் தேற்றலர், நாவலர் இயற்றிய நாழி நாம நூல் காவலின் நுனித்து உணர் கணிக மாக்களும், கூவுறு கோழியும், துயில்வு கொண்டவே. |
நாவலர் இயற்றிய - புலமை நலம் சான்றோர் உருவாக்கிய; நாழி நாம நூல் - காலக் கணிதமான சோதிட நூல்களை; காவலின் நுனித்து உணர் கணித மாக்களும் - பாதுகாத்து ஆராய்ந்து உணர்ந்த சோதிட வல்லுநர்களும்; கூவுறு கோழியும் - விடியலைக் கூவி உணர்த்தும் சேவல்களும்; ஏவலின் வன்மையை - (இரவை விலக்கிப் பகலை வரச் சொன்ன) இராவணனின் ஆணையின் வல்லமையை; எண்ணல் தேற்றலர் - உணரும் ஆற்றல் இல்லாதவராய்; துயில்வு கொண்ட - உறக்கத்தில் ஆழ்ந்திருந்தனர். (ஏ - அசை). இராவணன் ஆணையின் கடுமையால் காலக் கணிதமும் தோற்றது. இயற்கையை உணர்ந்த சேவல்களும் தோற்றன. எழுவாய்க்கு ஏற்றபடி அஃறிணை முடிவு உயர்திணையாகப் பொருள் முடிவு பெற்றது. 129 |