3196. இனையன உலகினில்
     நிகழும் எல்லையில்,
கனை கழல் அரக்கனும்,
     கண்ணின் நோக்கினான்;
'நினைவுறு மனத்தையும்
     நெருப்பின் தீய்க்குமால்;
அனைய அத் திங்களே
     ஆகுமால்' என்றான்.

    இனையன - இத்தகைய நிகழ்ச்சிகள்; உலகினில் நிகழும்
எல்லையில் -
உலகெங்கும் நடைபெற்ற பொழுதில்; கனை கழல்
அரக்கனும் -
ஒலிக்கும் வீரக்கழல் புனைந்த இராவணனும்; கண்ணின்
நோக்கினான் -
கண்களால் சூரியனைக் கண்டு; நினைவுறு மனத்தையும்-
எண்ணும் இதயத்தையும்; நெருப்பின் தீய்க்குமால் - இச் சூரியன் தீயாய்ச்
சுட்டெரிக்கின்றான்; ஆதலால்; அனைய அத்திங்களே ஆகும் - இவனும்
அச் சந்திரன் போன்றே இருக்கிறான்'; என்றான் - என்று மொழிந்தான்.
(ஆல் - அசை).                                            130