3197. | 'திங்களோ அன்று இது; செல்வ! செங் கதிர் பொங்கு உளைப் பச்சை அம் புரவித் தேரதால்; வெங் கதிர் சுடுவதே அன்றி, மெய் உறத் தங்கு தண் கதிர் சுடத் தகாது, என்றார் சிலர். |
சிலர் - (இராவணன் இவ்வாறு கூறக்கேட்ட) சில பேர்; 'செல்வ - திரு மிக்கவனே; இது திங்களோ அன்று - இது சந்திரன் அல்ல; செங்கதிர் - சிவந்த கதிரவனே; பொங்கு உளை - வளர்ந்த பிடரி மயிரை உடைய; பச்சை அம் புரவித் தேர் அது - பச்சை நிறமான அழகிய குதிரைகள் பூட்டிய தேர் அது; வெங்கதிர் சுடுவதே அன்றி - வெப்பம் மிக்க சூரியன் சுடுதல் இயல்புடையதே அல்லாமல்; மெய் உறத் தங்கு தண்கதிர் - உடலில் பட்டுக் குளிர்ச்சி தரும் சந்திரன்; சுடத் தகாது - வெப்பம் ஊட்டுவது அன்று'; என்றார் - என விளக்கம் கூறினர்; ஆல் - அசை. சூரியன் குதிரைகள் பசுமை நிறம் கொண்டனவாகக் கூறுதல் புராண மரபு. 131 |