கலிநிலைத் துறை

இரவியை நீக்கி இளம் பிறை வருக எனல்

3198.'நீலச் சிகரக் கிரி அன்னவன்,
     'நின்ற வெய்யோன்,
ஆலத்தினும் வெய்யன்;
     அகற்றி, அரற்றுகின்ற
வேலைக் குரலைத் "தவிர்க" என்று
     விலக்கி, மேலை
மாலைப் பிறைப் பிள்ளையைக்
     கூவுதிர் வல்லை' என்றான்.

    நீலச் சிகரக் கிரி அன்னவன் - சிகரங்கள் ஓங்கிய நீல மலை
போன்ற இராவணன்; 'நின்ற வெய்யோன் - இப்போது நிற்கும் கதிரவன்;
ஆலத்தினும் வெய்யன் - நஞ்சினும் கொடியவன்; அகற்றி - அவனை
நீக்கி விட்டு; அரற்றுகின்ற வேலைக் குரலை - பேரொலி எழுப்பும்
கடலின் ஓசையையும்; தவிர்க என்று விலக்கி - நீங்குக என்று விலக
ஆணையிட்டு; மேலை - முன்பு வந்த; மாலைப் பிறைப் பிள்ளையை -
மாலைப் பொழுதின் இளம்பிறையை; வல்லை - விரைவாக; கூவுதிர் -
அழையுங்கள்'; என்றான் - எனப்(பணியாளருக்கு) உத்தரவிட்டான்.

     மீண்டும் நிலவைக் கொணர ஆணையிட்டான். இளம்பிறையைப்
பிறைப் பிள்ளை என்று படிமச் சிறப்புறக் குறித்த நயம் உணர்க.     132