3199.சொன்னான் நிருதர்க்கு இறை;
     அம் மொழி சொல்லலோடும்;
அந் நாளில் நிரம்பிய அம் மதி,
     ஆண்டு ஓர் வேலை
முந் நாளின் இளம் பிறை
     ஆகி முளைத்ததுஎன்றால்,
எந் நாளும் அருந் தவம் அன்றி,
     இயற்றல் ஆமோ?

    நிருதர்க்கு இறை - அரக்கரின் தலைவனாகிய இராவணன்;
சொன்னான் - மேற் கூறியவாறு கட்டளையிட்டான்; அம்மொழி
சொல்லலோடும் -
அக் கட்டளை பிறப்பிக்கப்பட்டதும்; அந்நாளில்
நிரம்பிய அம்மதி -
அன்று முழுநிலவாய்த் திகழ்ந்த அச் சந்திரன்;
ஆண்டு - அவ்விடத்தில்; ஓர் வேலை - ஒரு புறத்தில்; முந்நாளின் -
மூன்றாம் நாளின்; இளம்பிறை ஆகி - கீற்று நிலவாக; முளைத்தது
என்றால் -
உதித்தது எனில்; எந்நாளும் - எக்காலத்திலும்; அருந்தவம்
அன்றி -
அரிய நற்றவம் செய்திருந்தால் அல்லாமல்; இயற்றல் ஆமோ?-
இத்தகு அருஞ்செயல் நிகழ்த்துவது சாத்தியம் ஆகுமா? (ஆகாது).

     முந்நாள் இளம்பிறை - மூன்றாம் பிறைச்சந்திரன். 'வேண்டிய வேண்டி
யாங்கு எய்தலாற் செய்தவம் ஈண்டு முயலப் படும்' (திருக்குறள் 265)
என்னும் கருத்து ஒப்பிடத்தக்கது.                                133