பிறையைப் பழித்தல்

3200.குடபாலின் முளைத்தது கண்ட
     குணங்கள்-தீயோன்,
'வடவா அனல்; அன்று எனின்,
     மண் பிடர் வைத்த பாம்பின்
விடவாள் எயிறு; அன்று எனின்,
     என்னை வெகுண்டு, மாலை
அட, வாள் உருவிக்கொடு
     தோன்றியது ஆகும் அன்றே.

    குடபாலின் முளைத்தது கண்ட - மேற்குத் திசையில் இளம்பிறை
தோன்றியதைக் கண்ட; குணங்கள் தீயோன் - தீய பண்புகளை உடைய
இராவணன்; (இது); வடவா அனல் - வடவைத் தீயே ஆகும்; அன்று
எனின் -
இல்லையெனில்; மண்பிடர் வைத்த பாம்பின் - பூமியைத்
தலையில் ஏந்திய ஆதிசேடனின்; விடவாள் எயிறு - நஞ்சு தோய்ந்த கூரிய
பல் ஆகும்; அன்று எனின் - இல்லையெனில்; மாலை - மாலைப் பொழுது;
என்னை வெகுண்டு - என் மீது சினம் கொண்டு; அட - கொல்லுதற்காக;
வாள் உருவிக் கொடு - வாளை உருவிக் கொண்டு; தோன்றியது ஆகும்-
எதிரில் காட்சி தருவது ஆகும்; அன்றோ - அல்லவோ (என்றான்).

     வடவைத் தீ கடலின் நடுவில் பெண் குதிரை முகத்தில் தோன்றுவது;
பிரளய கால நெருப்பு என்றும் கூறுவர்.                           134