3202.'உரும் ஒத்த வலத்து உயிர்
     நுங்கிய திங்கள், ஓடித்
திருமு இச் சிறு மின் பிறை,
     தீமை குறைந்தது இல்லை-
கருமைக் கறை நெஞ்சினில்
     நஞ்சு கலந்த பாம்பின்
பெருமை சிறுமைக்கு ஒரு பெற்றி
     குறைந்தது உண்டோ?'

    உரும் ஒத்த வலத்து - இடியேறு போல் வலிமையோடு; உயிர்
நுங்கிய திங்கள்-
என் உயிரை உண்ட முழு நிலவு; ஓடித் திருமு- சென்று
மறைந்து மீண்டும் வந்த; இச் சிறு மின் பிறை - இந்தச் சிறிய ஒளி வீசும்
பிறை; தீமை குறைந்தது இல்லை - கொடுமையில் சிறிதும் குறைந்தது
அன்று; கருமைக் கறை நெஞ்சினில் - சினக் கொடுமை மிக்க நெஞ்சு
படைத்த; நஞ்சு கலந்த பாம்பின் - நச்சுத் தன்மையுடைய பாம்பினது;
பெருமை - பெரிய உருவோ?; சிறுமைக்கு - சிறிய உருவம் தானே;
(ஆயினும்) ஒரு பெற்றி - விடத் தன்மையில்; குறைந்தது உண்டோ -
சற்றும் குறைவுற்றதாகுமோ? (ஆகாது).

     பாம்பு சிறியதாயினும் பெரியதாயினும் நஞ்சுடைமை மாறுபடுவதில்லை.
முழு நிலவும் பிறைக் கீற்றும் கொடுமையில் அவ்வாறே அமைவன.
எடுத்துக் காட்டுவமை அணி.                                   136