இருளினைப் பழித்தல்

3204.ஆண்டு, அப் பிறை நீங்கலும்,
     எய்தியது அந்தகாரம்;
தீண்டற்கு எளிது ஆய், பல
     தேய்ப்பன தேய்க்கல் ஆகி,
வேண்டின், கரபத்திரத்து
     ஈர்த்து விழுத்தல் ஆகி,
காண்டற்கு இனிதாய், பல
     கந்து திரட்டல் ஆகி,

    ஆண்டு - ஆங்கு; அப்பிறை நீங்கலும் - அவ்விளம் பிறை
அகன்றதும்; தீண்டற்கு எளிதாய் - தொடுதற்கு எளிதானது போலவும்; பல
தேய்ப்பன தேய்க் கல் ஆகி -
பல பொருள்களையும் தேய்க்கத் தக்க
பாறை போலவும்; வேண்டின் - விரும்பினால்; கரபத் திரத்து ஈர்த்து
விழுத்தல் ஆகி -
வாளினால் அறுத்து வீழ்த்தலாம் தன்மை போலவும்;
காண்டற்கு இனிதாய் - பார்க்க இனியது போலவும்; பல கந்து திரட்டல்
ஆகி -
பல தூண்களாகத் திரண்டது போலவும்; எய்தியது அந்தகாரம் -
இருட்டு வந்து சேர்ந்தது.

     இருளின் அடர்த்தியும் திண்மையும் உணர்த்தப் பெற்றன.     138