3205.முருடு ஈர்ந்து உருட்டற்கு எளிது என்பது
     என்? முற்றும் முற்றிப்
பொருள் தீங்கு இல் கேள்விச் சுடர்
     புக்கு வழங்கல் இன்றிக்
குருடு ஈங்கு இது என்ன, குறிக்கொண்டு,
     கண்ணோட்டம் குன்றி,
அருள் தீர்ந்த நெஞ்சின் கரிது
     என்பது அவ் அந்தகாரம்.

    முருடு ஈர்ந்து - (அவ்விருள்) திரட்சியான மரமென அறுக்கத்
தக்கதாகி; உருட்டற்கு எளிது என்பது என் - கம்பமாய் உருட்சி செய்யத்
தக்கதாய் எளிதாக அமைந்தது என்று சொல்லவும் வேண்டுமோ?; பொருள்
முற்றும் முற்றி -
பொருள் அறிவு முழுமையாய் அடைந்து; தீங்கு இல்
கேள்விச் சுடர் -
குற்றமற்ற கேள்விச் செல்வமாகிய ஒளி; புக்கு வழங்கல்
இன்றி -
உட்புகுந்து வெளிச்சம் தராமல்; குருடு ஈங்கு இது என்ன -
இவ்வுலகில் மனக் குருடே உண்மையான குருடு எனும்படி; குறிக் கொண்டு-
அப் பெயருக்கு இலக்காகி; கண்ணோட்டம் குன்றி - அருள் நோக்குக்
குறைந்து; அருள் தீர்ந்த - அருள் அருகிப் போன; நெஞ்சின் - மனித
உள்ளத்தை விடவும்; அவ்வந்தகாரம் - அவ்விருளானது; கரிது என்பது -
கருமை என்று கூறத்தக்கதாம்.

     அறிவொளி சாரா உள்ளத்தை இருளுக்கு உவமித்தார்.     139