3206.விள்ளாது செறிந்து இடை, மேல்
     உற ஓங்கி, எங்கும்
நள்ளா இருள் வந்து, அகன்
     ஞாலம் விழுங்கலோடும்,
'எள்ளா உலகு யாவையும் யாவரும்
     வீவது என்பது
உள்ளாது, உமிழ்ந்தான், விடம் உண்ட
     ஒருத்தன்' என்றான்.

    விள்ளாது - துண்டு படாமல்; இடை செறிந்து - எங்கும்
இடைவெளியின்றி நிறைந்து; மேல் உற ஓங்கி - விண்ணையும் வளைத்து
வளர்ந்து; எங்கும் நள்ளா இருள் வந்து - எங்கும் பொருந்தாத இருள்
வந்து; அகன் ஞாலம் விழுங்கலோடும் - பரந்த உலகினை மூடி
மறைத்ததும்; விடம் உண்ட ஒருத்தன் - நஞ்சினை விழுங்கிய ஒப்பற்ற
சிவபெருமான்; எள்ளா உலகு யாவையும் - இகழத் தக்கதல்லாத எல்லா
உலகங்களையும்; யாவரும் - எல்லா மக்களையும் (பொருள்களையும்);
வீவது என்பது உள்ளாது - அழிக்கும் என்று கருதாமல்; உமிழ்ந்தான் -
அந்நஞ்சை உமிழ்ந்து விட்டான்; என்றான் - என்று (இராவணன்)
மொழிந்தான்.

     இப்பாடல் உருவக அணி.                                140