3207.'வேலைத்தலை வந்து ஒருவன்
     வலியால் விழுங்கும்
ஆலத்தின் அடங்குவது அன்று இது:
     அறிந்து உணர்ந்தேன்;
ஞாலத்தொடு விண் முதல் யாவையும்
     நாவின் நக்கும்
காலக் கனல் கார் விடம் உண்டு
     கறுத்தது அன்றே.

    வேலைத்தலை வந்து - திருப்பாற் கடலினின்றும் பிறந்து; ஒருவன்
வலியால் விழுங்கும் -
ஒப்பற்ற சிவபெருமான் தன் ஆற்றலால் உண்ட;
ஆலத்தின் - ஆலகால விடம் எனும் ஒன்றில்; இது - இவ்விருள்;
அடங்குவதன்று - அடக்கத் தக்கதன்று; அறிந்து உணர்ந்தேன் -
இதனை யான் தெளிந்து கொண்டேன்; ஞாலத்தொடு விண்முதல்
யாவையும் -
மண்ணையும் விண்ணையும் யாவற்றையும்; நாவின் நக்கும் -
தன் நாவால் தீண்டி அழிக்கும்; காலக் கனல் - ஊழிக் காலமாகிய
நெருப்புப் பாம்பு; கார்விடம் உண்டு - கரிய விடத்தைத் தேக்கி; கறுத்தது
அன்றே -
கருமை பூண்டதை ஒக்கும் அன்றோ?

     ஆலகால நஞ்சு சிவனால் விழுங்கப்பட்டுவிட்டது; இந்த இருளை
விழுங்கும் சக்தி வேறு எதுவுமே இல்லை. விழுங்கப்பட முடியாத இந்த
இருளாகிய நஞ்சு மண் முதல் விண் ஈறாக உள்ள அனைத்தையும்
விழுங்கிவிடும். தற்குறிப்பேற்ற அணி. நாவின் நக்கும் என்றமையால் காலக்
கனலாகிய பாம்பு என வருவிக்கப்பட்டது.                          141