பிராட்டியின் உருவெளிப்பாடு காணுதல்

3208.'அம்பும் அனலும் நுழையாக்
     கன அந்தகாரத்
தும்பு, மழைகொண்டு,-அயல் ஒப்பு
     அரிது ஆய துப்பின்
கொம்பர்-குரும்பைக் குலம் கொண்டது,
     திங்கள் தாங்கி,
வெம்பும் தமியேன்முன், விளக்கு என,
     தோன்றும் அன்றே!

    வெம்பும் தமியேன்முன் - வேதனைப்பட்டுத் தனியே வெதும்பிக்
கொண்டுள்ள என் முன்னே; அயல் ஒப்பு அரிது ஆய துப்பின் கொம்பர்
-
பிறிதொன்றை ஒப்புமையாகக் கொள்ள முடியாத ஒரு பவளக்
கொம்பானது; அம்பும் அனலும் நுழையா - அம்பும் நெருப்பும் ஊடுருவ
முடியாததாகிய; கன அந்தகாரத் தும்பு மழை கொண்டு - செறிந்த
இருளை வரம்பாகக் கொண்ட மேகத்தைச் சுமந்து; குரும்பைக் குலம்
கொண்டது -
குரும்பைத் திரளைக் கொண்டதாகி; திங்கள் தாங்கி -
சந்திரனைத் தாங்கிக் கொண்டு; விளக்கு என - விளக்கைப் போல;
தோன்றும் - தோற்றமளிக்கிறது. (அன்று, ஏ - அசைகள்).

     ஒரு பவளக் கொடி தமியேன்முன் விளக்கெனத் தோன்றும் எனக்
கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும். பவளக்கொடி ஒன்று விளக்கைப்
போல் தோன்றுகின்றதாக உணர்கிறான். கரிய நிறத்துக்கு இருளையே
வரம்பாகக் கொண்ட மேகம்; மேகம் சுமந்த பவளக் கொம்பு;- கருங்
கூந்தல் இவ்வாறு விளக்கப்படுகிறது. பவளக் கொடி ஒன்று கார்மேகத்தைச்
சுமந்து, குரும்பைகள் ஏந்தி, திங்களைச் சுமந்து விளக்குப் போல்
தோன்றுகிறது. கூந்தல், மார்பகம், முகம் ஆகியவற்றை மேகம், குரும்பை,
திங்கள் ஆகியனவாகவும் கொடி போல் மென்மையாய் ஒளிரும்
உருவத்தைப் பவளக் கொடியாகவும் கம்பர் சித்திரிக்கிறார்.

          கயல் எழுதி வில்எழுதிக் காமன்
          செயல் எழுதித் தீர்ந்த முகம் திங்களோ காணீர்

     (சிலம்பு - கானல்வரி 11) என்ற இளங்கோவடிகளின் கற்பனை இங்கே
கருதத்தக்கது. இல் பொருளுவமைத் தன்மை கொண்ட உருவகம்; உயர்வு
நவிற்சியும் கொண்டது. எதனையும் ஊடுருவும் கூர்மை கொண்ட அம்பும்,
எதனையும் ஊடுருவி எரிக்க வல்ல நெருப்பும் தோல்வி காணும் மேகம்
என்றது கூந்தலின் செறிவையும் இருள் நிறத்தையும் சுட்டியதாகும். தும்பு -
வரம்பு. மழை - மேகம்.                                        142