3209. | 'மருளூடு வந்த மயக்கோ? மதி மற்றும் உண்டோ? தெருளேம்; இது என்னோ? திணி மை இழைத்தாலும் ஒவ்வா இருளூடு, இரு குண்டலம் கொண்டும் இருண்ட நீலச் சுருளோடும் வந்து, ஓர் சுடர் மா மதி தோன்றும் அன்றே! |
(மேலும் இராவணன் சிந்திக்கின்றான்) மருள் ஊடு வந்த மயக்கோ- காமக் கலக்கத்தால் எனக்கு வந்த மயக்கமோ இது?; மதி மற்றும் உண்டோ - என் அறிவு வேறாய்த் திரிவுற்றதோ?; தெருளேம், இது என்னோ - தெளிவற்றேன் இவ்வுருவம்தான் யாதோ?; திணி மை இழைத்தாலும் ஒவ்வா இருளூடு - செறிந்த அஞ்சன மை குழைத்தாலும் இணையாகாத இவ்விருட்டின் நடுவே; ஓர் சுடர் மாமதி - ஒரு காந்தி மிக்க அழகிய சந்திரன்; இரு குண்டலம் கொண்டும் - இரண்டு குண்டலங்களாகிற காதணியோடும்; இருண்ட நீலச் சுருளோடும் - கருமை கொண்ட கூந்தலோடும்; வந்து தோன்றும் - என் முன் வந்து புலனாகின்றது. (அன்றே - அசை). இராவணன் முன் தோன்றிய உருவெளித் தோற்றம் அவனைத் தடுமாற வைத்தது. 'ஒரு சுடர் மாமதி இருளூடு குண்டலம் கொண்டும் சுருளொடும் வந்து தோன்றும்' எனக் கூட்டிப் பொருள் காண்க. இதுவும் மேலைச் செய்யுள் போன்ற உவமை சார்ந்த உருவகமாகிய உயர்வு நவிற்சியே. 143 |