3210. | 'புடை கொண்டு எழு கொங்கையும், அல்குலும், புல்கி நிற்கும் இடை, கண்டிலம்; அல்லது எல்லா உருவும் தெரிந்தாம்; விடம் நுங்கிய கண் உடையார் இவர்; மெல்ல மெல்ல, மட மங்கையர் ஆய், என் மனத்தவர் ஆயினாரே. |
புடை கொண்டு எழு கொங்கையும் - பக்கங்களில் பொங்கி எழுகின்ற மார்பகங்களையும்; அல்குலும் - அல்குலையும், புல்கி நிற்கும் இடை கண்டிலம் - இணைக்கின்ற இடை என் கண்களுக்குப் புலனாகவில்லை; அல்லது எல்லா உருவும் தெரிந்தாம் - அது தவிரப் பிற உறுப்பெல்லாம் தெரிகின்றது; விடம் நுங்கிய கண்ணுடையார் - நஞ்சை அருந்திய கண்கள் இவருக்கு அமைந்தன; மெல்ல மெல்ல - மெதுவாக; மடமங்கையர் ஆய் - அழகிய இளம் பெண்ணாய்; இவர் என் மனத்தவர் ஆயினார் - இவர் என் நெஞ்சுக்குள் இடம் பெற்றுக் கொண்டார். (ஏ - அசை) உருவெளித் தோற்றமாகையினால் சிறிது சிறிதாக உறுப்புக்கள் புலனாகி ஒரு வடிவுற்றதாய்க் காட்டுகின்றார். 144 |