3211. | 'பண்டு ஏய் உலகு ஏழினும் உள்ள படைக்கணாரைக் கண்டேன்; இவர் போல்வது ஓர் பெண் உருக் கண்டிலேனால்; உண்டே எனின், வேறு இனி, எங்கை உணர்த்தி நின்ற வண்டு ஏறு கோதை மடவாள் இவள் ஆகும் அன்றே. |
பண்டு ஏய் உலகு ஏழினும் - முன்னமே ஏழு உலகங்களிலும்; உள்ள படைக்கணாரைக் கண்டேன் - இருக்கும் மகளிரைப் பார்த்துள்ளேன்; இவர் போல்வதோர் பெண் உருக் கண்டிலேன் - அவர்களிடையே இவ் வடிவம் போல் ஓர் பெண் உருவை நான் கண்டதில்லை; இனி வேறு உண்டே எனின் - உலகிலுள்ள பெண்களிலிருந்து மாறுபட்டதே இவ்வுரு என்றால்; எங்கை உணர்த்தி நின்ற - என் தங்கை சூர்ப்பணகை குறித்துச் சொன்ன; வண்டு ஏறு கோதை மடவாள் - வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடைய இளநங்கை; இவள் ஆகும் - இவளே ஆவாள். (அன்றே - தேற்றம்; ஆல் - அசை) படைக் கண்ணார் - அம்பு, வாள் போன்ற கண்களை உடைய பெண்கள். இதுவரை காணாத அழகு என்பதால் சூர்ப்பணகை குறிப்பிட்டது அவளேயாகும் இவள் எனக் கருதினான். 145 |