3212. | 'பூண்டு இப் பிணியால் உறுகின்றது, தான் பொறாதாள், தேண்டிக் கொடு வந்தனள்; செய்வது ஓர் மாறும் உண்டோ? காண்டற்கு இனியாள் உருக் கண்டவட் கேட்கும் ஆற்றால், ஈண்டு, இப்பொழுதே, விரைந்து, எங்கையைக் கூவுக' என்றான். |
(இவ்வாறு கருதிய இராவணன் மேலும் எண்ணலானான்) 'பூண்டு இப்பிணியால் - காதல் நோய் பொருந்தி அந்த நோயால்; உறுகின்றது தான் பொறாதாள் - (யான்) வருந்துவதை அறிந்து பொறாதவளாய்; தேண்டிக் கொடு வந்தனள் - (சீதை) என்னைத் தேற்றும் பொருட்டுத் தேடிக் கொண்டு வந்து விட்டாள்; செய்வது ஓர் மாறும் உண்டோ? - யான் இவளுக்குச் செய்யத்தக்க கைம்மாறு ஏதும் உண்டா? (இல்லை); காண்டற்கு இனியாள் - கண்டு களிக்க இனியவளான சீதையினது; உருக் கண்டவள் - வடிவத்தை நேரிற்கண்ட சூர்ப்பணகையை; கேட்கும் ஆற்றால் - வினவி உண்மை அறியும் பொருட்டு; ஈண்டு இப்பொழுதே - இதோ இந்தக் கணமே; விரைந்து - விரைவாக; எங்கையைக் கூவுக' என்றான் - என் தங்கையை அழையுங்கள் என்று ஆணையிட்டான். உருவெளித் தோற்றத்தைச் சீதையென மயங்கியவன் உண்மை அறியத் தங்கையை அழைத்தான். 146 |