இராவணன் சூர்ப்பணகை உரையாடல் 3214. | பொய்ந் நின்ற நெஞ்சின் கொடியாள் புகுந்தாளை நோக்கி, நெய்ந் நின்ற கூர் வாளவன், 'நேர் உற நோக்கு; நங்காய்! மைந் நின்ற வாள்-கண் மயில் நின்றென வந்து, என் முன்னர் இந் நின்றவள் ஆம்கொல், இயம்பிய சீதை?' என்றான். |
நெய்ந் நின்ற கூர் வளாவன் - நறு நெய் பூசிய கூரிய வாளை உடைய இராவணன்; பொய்ந்நின்ற நெஞ்சின் - பொய் குலவும் மனம் உடைய; கொடியாள் புகுந்தாளை நோக்கி - கொடிய சூர்ப்பணகை அங்கு வரவும், அவளைப் பார்த்து; நங்காய் - பெண்ணே!; நேர் உற நோக்கு - நன்றாக உற்றுப்பார்; மைந் நின்ற வாள் கண் - அஞ்சன மை பூசிய ஒளி் மிக்க கண்களோடு; மயில் நின்றென வந்து - ஒரு தோகை மயிலென முன் வந்து; என் முன்னர் - எனக்கு எதிரில்; இந்நின்றவள் ஆம் கொல் - இதோ நிற்கும் இவளே போலும்; இயம்பிய சீதை - நீ குறிப்பிட்ட சீதை; என்றான் - என்று வினவினான். இராவணன் மனத்தைக் காமம் கவ்விய நிலையில் உருவெளித் தோற்றத்தை மெய்யாக நம்பி இங்ஙனம் தங்கையிடம் கேட்டான். அவளும் அதே நிலையினள் என்பதை வரும் பாடல் உணர்த்தும். 148 |