3215. | 'செந் தாமரைக் கண்ணொடும், செங் கனி வாயினோடும், சந்து ஆர் தடந் தோளொடும், தாழ் தடக் கைகளோடும், அம் தார் அகலத்தொடும், அஞ்சனக் குன்றம் என்ன வந்தான் இவன் ஆகும், அவ் வல் வில் இராமன்' என்றாள். |
செந்தாமரைக் கண்ணொடும் - சிவந்த தாமரை மலர் போன்ற கண்களோடும்; செங்கனி் வாயினோடும் - கோவைக் கனி போன்ற இதழ்களோடும்; சந்து ஆர் தடந் தோளொடும் - சந்தனம் பொருந்திய உயர்ந்த தோள்களோடும்; தாழ் தடக்கைகளோடும் - நீண்ட பெரிய கரங்களோடும்; அம் தார் அகலத்தொடும் - அழகிய மாலை புனைந்த மார்பினோடும்; அஞ்சனக் குன்றம் என்ன வந்தான் - நீல மலை போல வந்து தோன்றும்; இவன் - இவ்வுரு உடையவனே; அவ் வல் வில் இராமன் ஆகும் - அவ்வீர வில்லேந்திய இராமன் ஆவான்; என்றாள் - என்று சூர்ப்பணகை மொழிந்தாள். உருவெளித் தோற்றத்தை நேர் மாறாகக் காம வசப்பட்ட சூர்ப்பணகை இராமன் என்றாள். இந்த வேடிக்கையான உள்ளத்தின் விளையாட்டைக் கம்பர் மனவெளி நாடகமாக்கி மகிழ்விக்கின்றார். கம்ப நாடகம் என அறிஞர் இத்தகு காட்சிகளை வியப்பர். வேதம் முதலிய நூலுணர்வும் தவமேம்பாடும் வரங்கொண்ட மேன்மையும், வெற்றிக் கொற்றமும் மற்றும் பல சிறப்புக்களையும் கொண்ட இராவணன் காமத்தால் சிறுமையுற்று எள்ளப்படும் நிலை அடைகிறான். 149 |