3216. | 'பெண்பால் உரு, நான், இது கண்டது; பேதை! நீ ஈண்டு, எண்பாலும் இலாதது ஓர் ஆண் உரு என்றி; என்னே! கண்பால் உறும் மாயை கவற்றுதல் கற்ற நம்மை, மண்பாலெவரேகொல், விளைப்பவர் மாயை?' என்றான். |
நான் கண்டது இது - நான் பார்த்த இவ்வடிவம்; பெண்பால் உரு - பெண் வடிவமாகும்; பேதை - அறியாமை உடையவளே!; நீ ஈண்டு - நீயோ இங்கு; எண்பாலும் இலாதது ஓர் - எண்ணத்தில் எங்கும் கருதப்படாத ஒரு; ஆண் உரு என்றி - ஆண் வடிவம் என்று கூறுகின்றாய்; என்னே - இது வியப்பாய் இருந்தது; கண்பால் உறும் மாயை - கண்கள் நம்பும்படியான மாயச் செய்கை; கவற்றுதல் கற்ற நம்மை - மயங்கும்படி செய்யவல்ல வித்தையாய்ப் பயின்ற நமக்கு; மண்பால் - இவ்வுலகில்; மாயை விளைப்பவர் எவரே கொல் - மாயை செய்தவர் யாராக இருக்கலாம்; என்றான் - என ஐயுற்று (இராவணன்) மொழிந்தான். மாயையில் வல்ல நம்மையும் ஏமாற்றும் மாயை உண்டோ என்றான். ஒருவர் பெண் என்ன, இன்னொருவர் ஆண் என்ன விளைந்த மயக்கத்தை இவ்வாறு குறித்தான். 150 |