3217. | 'ஊன்றும் உணர்வு அப்புறம் ஒன்றினும் ஓடல் இன்றி, ஆன்றும் உளது ஆம் நெடிது ஆசை கனற்ற நின்றாய்க்கு ஏன்று, உன் எதிரே, விழி நோக்கும் இடங்கள்தோறும், தோன்றும், அனையாள்; இது தொல் நெறித்து ஆகும்' என்றாள். |
'ஊன்றும் உணர்வு - (சீதையின் பால்) பதிந்து போன அறிவு; அப்புறம் ஒன்றினும் ஓடல் இன்றி - வேறு எதனினும் சென்று தங்காமல்; ஆன்றும் உளது ஆம் நெடிது ஆசை - மிக வளர்ந்துவிட்ட பெரிய காமம்; கனற்ற நின்றாய்க்கு - வெப்ப மூட்ட விளங்கும் உனக்கு; ஏன்று - பொருந்தும்படி; உன் எதிரே விழி நோக்கும் இடங்கள் தோறும் - உன் முன் கண்கள் பார்க்கும் இடமெல்லாம்; அனையாள் தோன்றும் - அவள் உருவே தோன்றலாயிற்று; இது தொல் நெறித்து ஆகும் - இவ்வாறு தோன்றுதல் பண்டு முதல் வழக்கமானது தான்; என்றாள் - என்று சூர்ப்பணகை (சமாதானம்) கூறினாள். தொல்நெறித்து ஆகும் என்று இராவணனுக்குச் சொன்ன சிறுமை தனக்கும் உரியது என்பதைச் சூர்ப்பணகை உணராதது குறிக்கத்தக்கது. 151 |