3219. | 'ஆம் ஆம்; அது அடுக்கும்; என் ஆக்கையொடு ஆவி நைய வேமால்; வினையேற்கு இனி என் விடிவு ஆகும்?' என்ன, 'கோமான்! உலகுக்கு ஒரு நீ, குறைகின்றது என்னே? பூ மாண் குழலாள்தனை வவ்வுதி, போதி' என்றாள். |
'ஆம், ஆம் அது அடுக்கும் - உண்மை, உண்மை, நீ கூறியது பொருந்தும்; என் ஆக்கையொடு ஆவி நைய - என் உடலும் உயிரும் கலங்க; வேம் - வெந்து தவிக்கிறேன்; வினையேற்கு இனி என் விடிவு ஆகும் - கொடிய வினை செய்த எனக்கு இனி விடுதலை தான் யாது'; என்ன - என்று (இராவணன்) கேட்க; 'கோமான் - தலைவனே; உலகுக்கு ஒரு நீ - இவ்வுலகுக்கே ஒப்பற்ற முதல்வனான நீ; குறைகின்றது என்னே- (இவ்வாறு) மனம் சிதைவது ஏனோ?; பூ மாண் குழலாள்தனை - பூக்கள் பொலியும் கூந்தலை உடைய சீதையை; வவ்வுதி போதி - சென்று கவர்ந்து வருவாயாக; என்றாள் - என (ஆலோசனை) கூறினாள் (ஆல் - அசை). சீதையை நினைந்து நோவதைவிட, அவளைக் கைப்பற்றிஅடைவாயாக என்றாள் சூர்ப்பணகை. 153 |